சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பார்சிலோனா - லிவர்பூல் இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா 3-0 என லிவர்பூல் அணியை வென்றிருந்தது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்பே லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர்களான முகமது சாலா மற்றும் ராபர்ட்டோ ஃபர்மிங்கோ காயம் காரணமாக விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே லிவர்பூல் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் பலனாக அந்த அணியின் டிவோக் ஒரிஜி 7ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதனையடுத்து பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, சுவாரஸ் ஆகியோர் கோல் அடிக்க முயற்சித்தனர்.
மெஸ்ஸியை சுற்றிவளைத்த லிவர்பூல் அணியினர் தொடர்ந்து இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து மேலும் எந்த கோல்களும் விழாத நிலையில், முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்தது.
பின்னர் இரண்டாம் பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே லிவர்பூல் அணிக்கு மாற்று வீரராகக் களமிறங்கிய ஜார்ஜினியோ, இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் பரபரப்பானது. இந்த பரபரப்பு முடிவடையும் முன்பே முதல் கோலை அடித்த ஒரிஜி, லிவர்பூல் அணிக்காக மூன்றாவது கோலை அடித்து அட்டகாசப்படுத்தினார். இதனால் ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது.
இதனையடுத்து, பார்சிலோனா அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், பார்சிலோனா அணியினர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் லிவர்பூல் அணியினரின் டிஃபண்டர்களால் எளிதாகத் தகர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 79ஆவது நிமிடத்தில் ஜார்ஜினியோ நான்காவது கோலை அடிக்க லிவர்பூல் அணியின் ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கேச் சென்றனர். இந்த கோலால் லிவர்பூல் அணி 4-0 என முன்னிலைப் பெற்றது.
கோல் அடித்த மகிழ்ச்சியில் ஜார்ஜினியோ இதனையடுத்து இரண்டாம் பாதி நேரம் முடிவடைந்த நிலையில், கூடுதலாக மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதிலும் பார்சிலோனா அணி எந்த கோலும் அடிக்காததால் லிவர்பூல் 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
மேலும், முதல் அரையிறுதியில் 3-0 என வீழ்ந்த லிவர்பூல் அணி, இரண்டாம் அரையிறுதியில் 4-0 என வென்றது. இதனால் 4-3 என்ற கோல்களின் அடிப்படையில் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் அணி தகுதிபெற்றது.