1970,80களில் ஐரோப்பாவின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கென்னி டால்லிஷ். ஸ்ட்ரைக்கரான இவர் ஸ்காட்லாந்தின் செல்டிக் கால்பந்து கிளப் அணிக்காக 1969 முதல் 1977ஆம் ஆண்டுவரை 204 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதன்பின், 1977இல் இவர் இங்கிலாந்தின் லிவர்பூல் கிளப் அணியில் சேர்ந்த பிறகு, அந்த அணி 1980களில் உலகளவில் மிகவும் பிரபலமடையத் தொடங்கியது. 1977 முதல் 1991வரை லிவர்பூல் அணிக்காக எட்டு லீக் சாம்பியன்ஷிப் பட்டத்தையும், மூன்று யூரோ கோப்பைகளையும் வென்று தந்தார். லிவர்பூல் அணிக்காக 515 போட்டிகளில் விளையாடி 172 கோல்களை அடித்துள்ளார்.
இந்நிலையில், 69 வயதான இவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த எட்டாம் தேதி சாதாரண தொற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்குச் சென்றபோது இவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்தது. எனினும் இவருக்கு கோவிட் 19 தொற்றின் எந்தவொரு அறிகுறியும் கண்டறியப்படவில்லை என்றாலும் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரர் நார்மன் ஹன்டருக்கும் கோவிட் 19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா வைரஸ் தொற்று முன்னாள் ஐஸ் ஹாக்கி வீரர் உயிரிழப்பு!