ஃபிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவில் சிறந்த கால்பந்து வீரருக்கு பலான் டி ஆர் (Ballon d'or) விருது வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், பாரிஸில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான பலான் டி ஆர் விருதினை பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி வென்றுள்ளார். கடந்த முறை இந்த விருதை பெற்ற ரியல் மாட்ரிட் வீரர் லூகா மாட்ரிக், மெஸ்ஸிக்கு நடப்பு ஆண்டுக்கான பலான் டி ஆர் விருதினை வழங்கினார்.
மெஸ்ஸி, வெல்லும் ஆறாவது பலூன் டி ஆர் விருது இதுவாகும். இதற்கு முன்னதாக, அவர் 2015ஆம் ஆண்டில் இந்த விருதினை பெற்றிருந்தார். இதன் மூலம், பலான் டி ஆர் விருதை ஆறு முறை (2009, 2010, 2011, 2012, 2015, 2019) வென்ற ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்து, மீண்டும் கால்பந்தில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க:ஒருநாள் மெஸ்ஸியுடன் டின்னர் சாப்பிடுவேன்” - மனம் திறந்த ரொனால்டோ
மெஸ்ஸி அடுத்தப்படியாக, யுவண்டஸ் வீரர் ரொனால்டோ இந்த விருதை ஐந்து முறை பெற்றுள்ளார். கடந்த முறை இவ்விருது பட்டியலில் ஐந்தாவது இடம் மட்டுமே பிடித்திருந்த மெஸ்ஸி, 2018-19 சீசனில் 51 கோல் அடித்தது மட்டுமின்றி 19 அசிஸ்ட்டுகள் ஏற்படுத்தித் தந்து அனைவரையும் வியக்க வைத்தார். கோல் அடிப்பது மட்டுமின்றி, அசிஸ்ட்டுகளை ஏற்படுத்தித் தருவதும் என பார்சிலோனா அணியின் ப்ளே மேக்கராக இருக்கும் மெஸ்ஸி நடப்பு ஆண்டில் 40 கோல்களை அடித்து, தனது மேஜிக்கை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்காட்டியுள்ளார்.
பலான் டி ஆர் விருதுகளுடன் மெஸ்ஸி
பலான் டி ஆர் விருதுத் தவிர மெஸ்ஸி, நடப்பு ஆண்டில் ஃபிபாவின் சிறந்த வீரருக்கான விருதையும், கடந்த சீசனில் அதிக கோல்கள் அடித்தற்காக வழங்கபடும் கோல்டன் பூட் விருதையும் ஆறாவது முறையாக பெற்றிருந்தார். இதன் மூலம், இந்த மூன்று விருதுகளையும் தலா ஆறு முறை பெற்ற ஒரே வீரரும் மெஸ்ஸியே என்பது நினைவுக்கூறத்தக்கது.
ஆடவர் வீரர்களுக்கு வழங்கப்படுவது போல, 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீராங்கனைக்காக வழங்கப்படும் பலான் டி ஆர் விருதை அமெரிக்காவின் மேகன் ரஃபினோ தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றார். இந்த பலான் டி ஆர் விருதானது, கால்பந்து விளையாட்டு பத்திரிக்கையாளர்களின் வாக்குகள் அடிப்படையில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மெஸ்ஸி என்னும் மாயக்காரன் உருவான கதை!