டியாகோ மரடோனாவுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக, போட்டியின் இடையே ஜெர்சியை மாற்றிய மெஸ்ஸிக்கு, ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு 600 யூரோ(இந்திய மதிப்பில் 53 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.
கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா, சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு பலரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ஓசாசா அணிக்கு எதிராக களமிறங்கிய மெஸ்ஸி, முதல் கோல் அடித்ததும் தனது ஜெர்ஸியை கழற்றிவிட்டார். அப்போது, உள்ளே டியாகோ கடைசியாக விளையாடிய 'நியூவெலின் ஓல்ட் பாய்ஸ்' கிளப் அணியின் 10ஆம் எண் ஜெர்சியை அணிந்திருந்தார், அதை தொட்டு முத்தமிட்டு, வானத்தை பார்த்து மரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தினார். இச்செயலுக்காக மெஸ்ஸிக்கு மஞ்சள் நிற கார்ட் போட்டியின் இடையே வழங்கப்பட்டது. ஆனால், அப்போட்டியில், மெஸ்ஸி அணியான பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மரடோனாவுக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்திய மெஸ்ஸி இந்நிலையில், மெஸ்ஸியின் செயலை ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு கண்டித்தது மட்டுமின்றி அவருக்கு 600 யூரோ (இந்திய மதிப்பில் 53 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, பார்சிலோனா அணிக்கும் 180 யூரோ (இந்திய மதிப்பில் 16 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளனர். மரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தியற்கு அபராதம் விதித்தது தவறு என சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதற்கு எதிராக மெஸ்ஸி அல்லது அவரது கிளப், மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.