இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனாகவும் ஸ்ட்ரைக்கராகவும் திகழ்ந்தவர் பி.கே. பானர்ஜி. கால்பந்து போட்டிகளில் 1951 முதல் 1962 வரையிலான காலம் இந்திய அணியின் பொற்காலமாக அமைய இவரது பங்களிப்பும் முக்கிய காரணமாகும். 1956இல் மெல்போர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதிலும் பானர்ஜியின் பங்களிப்பு அளப்பரியது.
மேலும் இவரது தலைமையிலான இந்திய அணி 1960 ரோம் ஒலிம்பிக்கில் பங்கேற்றது. இதில், பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார். அதன்பின் இவரது சிறப்பான கேப்டன்ஷிப்பால் இந்திய அணிக்கு 1962இல் நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்தது.
83 வயதான இவர் கடந்த மாதம் மார்பக தொற்று நோய் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டர். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.