கரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லா லிகா கால்பந்து தொடர், மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது.
2019-20 சீசனுக்கான நேற்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, லெகனஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
பார்சிலோனா அணியின் சொந்த மைதானமான கேம்ப் நெளவில் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பத்திலிருந்தே லெகனஸ் அணி கோல் அடிக்க கடுமையாக போராடியது.
அதேசமயம் பார்சிலோனா அணியிடம் சிறப்பாக டிஃபென்டிங்கும் செய்தது. இந்த நிலையில், ஆட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் இளம் முன்கள வீரரான அன்சூ ஃபாட்டி அசத்தலான முறையில் கோல் ஒன்றை அடித்தார்.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதியின் 69ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு கிடைத்த பெனால்டி கிக்கை, அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் ஆக்கினார்.
நடப்பில் லா லிகா சீசனில் அவர் அடிக்கும் 21வது கோல் இதுவாகும். இதுமட்டுமின்றி, பார்சிலோனா விற்கும், அர்ஜென்டினாவிற்கும் சேர்த்து இவர் அடிக்கும் 699ஆவது கோலும் இதுவாகும்.
இறுதியில், பார்சிலோனா அணி இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் லெகனஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி 64 புள்ளிகளுடன் நடப்பு சீசனுக்கான புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.