கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 89 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், இப்பெருந்தொற்றினால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால், ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர்.
இந்நிலையில், இப்பெருந்தொற்றின் காரணமாக உணவின்றி தவித்து வந்த ஏழை மக்களுக்கு உதவும் வகையில் விளையாட்டுத் துறையை சார்ந்த பல்வேறு பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தனர். அந்த வரிசையில் இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஃபார்வேட் வீரர் மார்கஸ் ராஷ்போர்ட், தனது சமூக சேவை மூலம் சுமார் 1.3 மில்லியன் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்.
இவரின் செயலை கண்டு லிவர்பூல் எஃப்சி அணியின் மேலாளர் ஜூர்கன் க்ளோப் கூறுகையில், "மார்கஸ் ராஷ்போர்ட் செய்வதை போன்று என்னால் செய்ய இயலுமா என்பதை கூட யோசிக்க முடியவில்லை. இது இன்றியமையாத ஒரு செயலாகவே காண்கிறேன். ஒரு நபர் தனியாக அல்லாமல், அவரது பெயரையும் அவரது முயற்சியையும் கொண்டு மிக முக்கியமான விஷயங்களை மாற்ற முடியும் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
சமத்துவம் என்பது கால்பந்தில் மட்டுமல்லாமல், சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு விளையாட்டிலும் ஏராளமான புத்திசாலிகள் இருப்பதை நீங்கள் காணலாமே தவிர, ஒருவரின் தோல் நிறத்தை கவனிக்க தேவையில்லை" என்று பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக, மார்கஸ் ராஷ்போர்டின் இந்த செயலுக்கு, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், "வறுமையைச் சுற்றியுள்ள மக்களின் விவாதத்திற்கான பங்களிப்பு இது" என பாராட்டியது குறிப்பிடத்தக்கது.