ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கரோனா பாதுகாப்பு விதிகளுடன் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த சீசன் தொடங்கியது முதலே பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது.
இதில் இன்று (டிச.27) நடைபெறும் லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - ஹைதராபாத் எஃப்சி அணியை எதிர்கொள்கிறது. நடப்பு ஐஎஸ்எல் சீசனில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இன்னும் ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாமல் இருப்பதால் இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிரகரித்துள்ளது.
கேரளா பிளாஸ்டர்ஸ்:
ஒவ்வொரு ஆண்டும் நட்சத்திர வீரர்களைக் கொண்டு சீசனின் தொடக்கம் முதலே வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வந்துள்ள கேரளா அணி, நடப்பு சீசனில் ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாமல் இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎஸ்எல் தொடரின் வலிமையான அணிகளில் ஒன்றாக இருந்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, இந்த சீசனில் தனது முதல் வெற்றிக்காக போராடி வருவது பலருக்கு ஆச்சரியத்தையும் அதேசமயம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஹைதராபாத் எஃப்சி:
கடந்த சீசனின்போது அறிமுகமான ஹைதராபாத் எஃப்சி அணி, பிற அணிகளைக் காட்டிலும் நடப்பு சீசனில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடப்பு சீசனில் இதுவரை ஆறு லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஹைதராபாத் அணி, இரண்டு போட்டிகளில் வெற்றியையும், மூன்று போட்டிகளை சமன் செய்தும், ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவியுள்ளது.
தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹைதராபாத் அணி கடந்த போட்டிகளில் மும்பை அணியிடன் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கும் திரும்பும் முனைப்பில் ஹைதராபாத் அணி உள்ளது.
இதையும் படிங்க : பாக்ஸிங் டே போட்டிகளைத் தவறவிடும் ரோட்ரிக்ஸ்!