2019-20ஆம் ஆண்டிற்கான இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) தொடரில் கொல்கத்தாவின் ஏடிகே அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இதன்மூலம் ஐஎஸ்எல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் படைத்தது.
இத்தொடரின் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்வியால், ஐஎஸ்எல் புள்ளிப் பட்டியலில் 19 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தைப் பிடித்து லீக் சுற்றோடு வெளியேறியது.
இதையடுத்து, அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஈல்கோ ஸ்கட்டோரியை, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது குறித்து அந்த அணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி தலைமை பயிற்சியாளர் ஈல்கோ ஸ்கட்டோரியை எங்களிடமிருந்து பிரிகிறார். அவர் தனது பதவிக்காலத்தில் எங்களது அணிக்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கும், சேவைகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் அவர் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம் என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக கிபு விக்குனா(Kibu Vicuna) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தாண்டு நடைபெற்ற ஐ-லீக் தொடரில் மோகன் பாகன் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு, கோப்பையை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:BWFஇன் ‘ஐ யம் பேட்மிண்டன்’ தூதராக நியமிக்கபட்டார் பி.வி.சிந்து!