கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இத்தாலியில் நாளுக்குநாள் மோசமாகிவருகிறது. அந்நாட்டில் இந்த வைரசால் இதுவரை ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, யுவென்டஸ் அணியைச் சேர்ந்த பிளேஸ் மட்டூடி, டேனியல் ருகானி ஆகியோர் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று யுவென்டஸ் கால்பந்து கிளப் அணியின் நட்சத்திர வீரரான பாலோ டிபாலாவுக்கும் அவரது காதலி ஒரியானாவுக்கும் கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியது.
தனது காதலி ஒரியானாவுடன் டிபாலா இந்த ஒரு வார காலத்தில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனுபவம் குறித்து டிபாலா தனியார் தொலைக்காட்சிக்கு பேசியுள்ளார். அதில், "முன்பைவிட என் உடல்நலத்தில் முன்னேற்றம் தெரிகிறது. இரண்டு நாள்களுக்கு முன் உடல்நலம் மிகவும் மோசமாகவே இருந்தது. எனக்கு மூச்சு விடுவதில் சிரமமாக இருந்ததால் என்னால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நடக்க முடியவில்லை. என் உடல் கணமாக இருந்ததை நான் உணர்ந்தேன். மேலும் எனது உடல் மிகவும் சோர்வாகவும் இருந்தது.
ஆனால் இப்போது நான் நடக்கவும், கால்பந்து பயிற்சி மேற்கொள்ளவும் முயற்சிக்கிறேன். எனது காதலி ஒரியானாவும் நானும் இந்த கோவிட்-19 வைரசிலிருந்து மீண்டுவருகிறோம்" எனத் தெரிவித்தார். நடப்பு சீசனில் யுவென்டஸ் அணிக்காக டிபாலா இதுவரை 13 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
இதையும் படிங்க:2 ஆண்டுகள், 9 மாதங்கள், 18 நாள்கள்... கோமாவிலிருந்து மீண்ட அயாக்ஸ் வீரர்!