அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் பவுலோ டிபாலா, இத்தாலியின் சீரி ஏ தொடரில் யுவென்டஸ் அணிக்காக விளையாடிவருகிறார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் டிபாலாவிற்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இதனிடையே, கரோனா வைரஸால் தான் மூச்சுவிடுவதில் சிரமமாக உள்ளதாக அவர் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மற்ற யுவென்டஸ் வீரர்களான டேனியல் ருகானி, பிளேஸ் மட்டூடி ஆகியோர் குணமடைந்தனர். இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு தான் கரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக டிபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது பதிவில், கடந்த சில வாரங்களில் எனது உடல்நலம் குறித்து பலரும் என்னிடம் பேசினார்கள். ஆனால் தற்போது நான் கரோனாவிலிருந்து மீண்டுவந்துள்ளேன் என்பதை உறுதியாக கூறுகிறேன். எனக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.