இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை ஆறு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2020-21ஆம் ஆண்டிற்கான சீசனுக்கான வேலைகளில் கிளப் அணிகள் இறங்கியுள்ளன.
இந்நிலையில், கடந்த சீசனில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் மிட்ஃபீல்டராக வலம் வந்த சாமுவேல் லால்முவான்பூயா, அந்த அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார். இதையடுத்து, ஏழாவது சீசன் ஐஎஸ்எல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சாமுவேலை, இரண்டாண்டு ஒப்பந்தத்தில் ஒடிசா எஃப்சி அணி சேர்த்துள்ளது.
இது குறித்து ஒடிசா எஃப்சி அணியின் தலைவர் ரோகன் சர்மா கூறுகையில், ‘சாமுவேல் போன்ற வீரரை எங்களது அணியில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக, நாங்கள் இன்னும் வலிமையான அணியாக திகழ்வோம். மேலும், அவரது ஆட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதால், சாமுவேல் நிச்சயம் ஒடிசா அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார். எங்கள் அணியை கட்டமைக்க இவரை போன்ற வீரர்களால் மட்டுமே முடியும்’ என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து சாமுவேல் கூறுகையில், ‘ஒடிசா எஃப்சி அணிக்காக விளையாடுவதை எண்ணி நான் மிகவும் ஆர்வமடைந்துள்ளேன். ஏனெனில் அவர்கள் சிறந்த ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளதால், அணி வீரர்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். மேலும் ஒடிசா எஃப்சி அணிக்காக என்னால் முடிந்த உதவிகளை செய்து, அடுத்த சீசனில் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சந்தேஷ் ஜிங்கனை கவுரவித்த கேரளா பிளாஸ்டர்ஸ்!