இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நேற்றைய லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி அணி, மும்பை சிட்டி எஃப்சி அணியை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணியில் மோடோ சௌகௌ ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். கடுமையாகப் போராடியும் பெங்களூரு அணியால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோலடிக்க இயலாததால் மும்பை அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இதனையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் அமீன் செர்மிட்டி கோலடித்து அசத்த மும்பை அணியின் வெற்றி வாய்ப்பு உறுதியானது. ஆனால் பெங்களூர் அணி தனது அனைத்து முயற்சிகளையும் பயன்படுத்திய போதிலும், மும்பை டிஃபென்சிடம் மண்ணைக் கவ்வியது.
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் மும்பை எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி, பிளேஆஃப் சுற்றுக்கு வாய்ப்பினை தக்கவைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 19 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் நீடித்துவருகின்றது.
இதையும் படிங்க:60 யார்ட் தூரத்திலிருந்து மெர்சல் கோல் அடித்த சென்னை வீரர்