நடப்பு சீசனுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ISL) தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதின. கொச்சி நேரு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் ஆட்டத்தின் 14ஆவது நிமிடத்திலேயே ஹைதராபாத் வீரர் போபோ கோல் அடித்து அசத்தினார்.
இதையடுத்து, ஆட்டத்தில் எழுச்சி பெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தனது சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேரள அணியின் நட்சத்திர வீரர்களான பார்தோலோமியோ 33ஆவது நிமிடத்திலும், துரோபரவ் 39ஆவது நிமிடத்திலும், ரஃபேல் மெஸ்ஸி பவுலி 45ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடிக்க முதல் பாதி முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் கேரள அணி முன்னிலை பெற்றது.
இதையடுத்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்திய கேரள அணி 59ஆவது நிமிடத்தில் அந்த அணி வீரர் சைத்யசென் சிங் கோல் அடித்தார். இதையடுத்து, 75ஆவது நிமிடத்தில் மீண்டும் கேரள வீரர் பார்தோலோமியோ தனது இரண்டாவது கோல் அடித்து மிரட்டினார். இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.