இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துத் தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் இதில் பங்கேற்றுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குவதால் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டிக்கு முன்பாக கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ஏழாவது இடத்திலும், ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி எட்டாவது இடத்திலும் இருந்தன. இதில் ஜாம்ஷெட்பூர் அணி கடைசியாக விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்று டிரா, மூன்று தோல்வி என ஒரு வெற்றிகூட பதிவு செய்யாமல் இருந்ததால், அந்த அணி இப்போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கியது.
ஜாம்ஷெட்பூர் நகரில் உள்ள ஜேஆர்டி டாடா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கத்திலேயே 11ஆவது நிமிடத்தில் கோல் அடித்த கேரள வீரர் மெஸ்ஸி போலி, ஜாம்ஷெட்பூர் அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து இரு அணியினரும் கோல் அடிக்க மும்முரம் காட்டினர். பின்னர் 39ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் நோ அகோஸ்டா, ஒரு கோல் அடித்து தனது அணியை சமநிலை அடையச் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையோடு நிறைவடைய, இரண்டாவது பாதியில் கேரள அணியின் பர்த்தலோமியோ ஓக்பெச்சே 56ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.