இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் இந்தியா முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியனான பெங்களூரு எஃப்சி அணி, கொல்கத்தா ஏடிகே அணியை எதிர்கொண்டது.
கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோலடிக்க போராடினர். இருப்பினும் இரு அணிகளுடைய டிஃபென்ஸ் வலுவானதாக இருந்ததால், முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோலேதுமின்றி சமநிலையில் இருந்தது.
அதையடுத்து இரண்டாவது பாதியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே அணியின் டேவிட் வில்லியம்ஸ், ஆட்டத்தின் 47ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். பின் பெங்களூரு அணி இறுதிவரை போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் கொல்கத்தா ஏடிகே அணி 1-0 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஏடிகே அணி இத்தொடரில் பங்கேற்ற 10 போட்டிகளில் 5இல் வெற்றியும், இரண்டு தோல்வியும், மூன்று போட்டிகளை டிராவிலும் முடித்து 18 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு எஃப்சி அணி 16 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாமிடத்தில் நீடிக்கிறது.
இதையும் படிங்க:எப்போது ஓய்வு? லியாண்டர் பயஸ் அறிவிப்பு