இந்தியன் சூப்பர் லீக் என்றழைக்கப்படும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பலம் வாய்ந்த அத்லெடிக்கோ கொல்கத்தா அணி ஐஎஸ்எல்லின் புதிய வரவான ஹைதராபாத் அணியுடன் மோதியது.
கொச்சியில் நடைபெற்ற நடப்பு சீசனின் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியிடம் கொல்கத்தா அணி 1-2 என்ற கணக்கில் அடிவாங்கியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இப்போட்டியில் கொல்கத்தா அணி தனது சொந்த மண்ணில் களமிறங்கியது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கம் முதலே கொல்கத்தா அணி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கொல்கத்தா வீரர் டேவிட் வில்லியம்ஸ் 25ஆவது நிமிடத்தில் கோல் அடித்து கோல் கணக்கை தொடங்கினார். அவரைத் தொடர்ந்து 27ஆவது நிமிடத்தில் மற்றொரு கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணாவும் கோல் அடித்தார். பின்னர் மீண்டும் 44ஆவது நிமிடத்தில் டேவிட் வில்லியம்ஸ் கோல் அடிக்கவே அந்த அணி முதல் பாதியின் முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலையில் இருந்தது.