இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் இன்று நடைபெற்ற பத்தாவது லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்.சி. - ஹைதராபாத் எஃப்.சி. அணிகள் மோதின. இதில் ஜாம்ஷெட்பூர் அணி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யவும் அறிமுக அணி ஹைதராபாத் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்யவும் களமிறங்கின.
ஜாம்ஷெட்பூரின் ஜே.ஆர்.டி. டாடா மைதானத்தில் இப்போட்டியின் தொடக்கத்திலிருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். அதிலும் ஹைதராபாத் வீரர்கள் உள்ளூர் அணி வீரர்களை விட பந்தை அதிக நேரம் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
எனினும் ஆட்டத்தின் 34ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் பரூக் சவுத்திரி கோல் அடித்து முன்னிலைப் பெற்றுத் தந்தார். இதற்கு பதிலடி தரும்விதமாக முதல் பாதியில் கூடுதலாக ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஹைதராபாத் வீரர் மார்சிலின்ஹோ லெய்ட் பெரெய்ரா ஒரு கோல் அடித்து தங்கள் அணியை சமநிலை பெறவைத்தார்.
ஜாம்ஷெட்பூர் எஃப்.சி. அணி பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர்கள் அனிகெட் ஜாதவ் (62ஆவது நிமிடம்), செர்ஜியோ கேஸ்டல் (75ஆவது நிமிடம்) என கோல் அடித்து முன்னிலைப் பெற்றுத்தந்தனர். இதனால் இறுதியில் ஜாம்ஷெட்பூர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் முதல் கோல் அடித்த ஜாம்ஷெட்பூர் வீரர் பரூக் சவுத்திரிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது தொடர்ச்சியாக அவர் பெறும் இரண்டாவது ஆட்டநாயகன் விருதாகும்.
இதன்மூலம் நடப்புத் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த ஜாம்ஷெட்பூர் அணி ஆறு புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. அதே வேளையில் அறிமுக அணியான ஹைதராபாத் அணி ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றதால் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது.