இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து ஆறவாது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை எஃப்.சி. - எஃப்.சி. கோவா அணிகள் மோதின.
இப்போட்டியில் துடிப்புடன் செயல்பட்ட கோவா அணி வீரர்கள் லென்னி ரோட்ரிக்ஸ் (27ஆவது நிமிடம்), பெர்ரன் கோரோமினாஸ் (45ஆவது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்ததால் கோவா அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை வகித்தது.
இதற்கு பதிலடி தரும்படியாக இரண்டாவது பாதி ஆட்டத்தில் மும்பை அணி வீரர்கள் சரத் கோலுய் 49ஆவது நிமிடத்திலும் சோவிக் 55ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோலடிக்க மும்பை அணி சமநிலை பெறமுடிந்தது. இதனால் மைதானத்தில் திரண்டிருந்த உள்ளூர் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
ஆனால் மும்பை ரசிகர்களின் இந்த சந்தோஷம் நீண்டநேரம் நீடிக்கவில்லை. காரணம் மீண்டும் கோவா வீரர் ஹுகோ போமோஸ் 59ஆவது நிமிடத்தில் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் பெறவைத்தார். இதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். அதிலும் கோவா அணி வீரர்கள் அதிக நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்து மும்பை அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினர்.
மும்பை எஃப்.சி. - எஃப்.சி. கோவா போட்டி இறுதியில் ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருந்தபோது கோவா வீரர் கார்லஸ் பினா ஒரு கோல் அடிக்கவே எஃப்.சி. கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பை எஃப்.சி. அணியை வீழ்த்தியது. இதனால் மும்பை அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை உள்ளூர் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. முன்னதாக அந்த அணி ஒடிசா அணிக்கு எதிரான போட்டியிலும் 4-2 என தோல்வியடைந்திருந்தது.
மேலும் படிக்க: சூப்பர் சாதனைப் படைத்த 'லேடி சூப்பர் ஸ்டார்' ஸ்மிருதி மந்தானா!