ஐஎஸ்எல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியை எதிர்த்து எஃப்.சி. கோவா அணி ஆடியது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் கோவா அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் ஹியூகோ பவுமஸ் (Hugo Boumous) கோவா அணிக்காக முதல் கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். இதையடுத்து இரு அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. அதனால் 1-0 என்ற கோவா அணியின் முன்னிலையுடன்முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
பின்னர் நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மீண்டும் ஹியூகோ இரண்டாவது கோலை அடிக்க, கோவா அணி 2-0 என்று முன்னிலையுடன் தொடர்ந்தது. தொடர்ந்து 64ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை அந்த அணியின் மர்சிலினோ (marcelinho) பயன்படுத்தி ஹைதராபாத் அணிக்காக முதல் கோல் அடிக்க ஆட்டம் 2-1 என்று பரபரப்பானது.
ஆனால் இந்த பரபரப்பிற்கிடையே கோவா அணியின் கோரொமின்ஸ் கோல் அடித்து பதிலடி கொடுத்தார். அதையடுத்து ஹைதராபாத் அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தடுக்கப்பட்டன.