இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் இந்தியா முழுவதிலும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இரண்டுமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான சென்னையின் எஃப்.சி அணி இம்முறை ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தைத் தவிர்த்து மற்ற ஆறு போட்டிகளில் மூன்று டிரா, மூன்று தோல்வி என புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது.
இதன் காரணமாக சென்னையின் எஃப்.சியின் பயிற்சியாளார் ஜான் கிரிகோரி, தோல்விகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து சென்னை அணியின் புதிய பயிற்சியாளராக ஓவன் காய்ல் நியமிக்கப்பட்டார்.
ஓவன் காய்லின் வருகைக்குப்பின் சென்னையின் எஃப்.சி அணி முதன்முறையாக உள்ளூரில் இன்று களமிறங்கியது. சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை அணி கேரள பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள கேரள அணியும் இரண்டாவது வெற்றியை நோக்கி களமிறங்கியது.
இந்தப் போட்டியில் நான்காவது நிமிடத்திலேயே சென்னையின் எஃப்.சி வீரர் ஆண்டர் ஷெம்ரி கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி தரும்விதமாக கேரள வீரர் ஓக்பெச்சே 15ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை சமநிலைப் பெறச்செய்தார். பின்னர் 24ஆவது நிமிடத்தில் அம்பயர் செய்த தவறால் சென்னையின் எஃப்.சி வீரர் வால்ஸ்கி அடித்த கோல் திரும்பப் பெறப்பட்டது.
சென்னையின் எஃப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் போட்டி எனினும் லாலியஜுவாலா 30, நெரிஜுஸ் வால்ஸ்கி 40 ஆகியோர் கோல்அடித்து முதல்பாதியில் சென்னை அணி அபார முன்னிலைபெற காரணமாக இருந்தனர். இரண்டாவதுபாதி ஆட்டத்தில் இருஅணி வீரர்களும் சமபலத்துடன் மோதிக் கொண்டனர். பின்னர் இறுதிவரை இருஅணி வீரர்களும் கோல் அடிக்காமல் இருந்ததால் இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்.சி அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டபோது சென்னை வீரர் எலி சாபியாவிற்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி எட்டாவது இடத்துக்கு முன்னேறியது. புதிய பயிற்சியாளரின் கீழ் எழுச்சிக் கண்டுள்ள சென்னையின் எஃப்.சி எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம்.
இதையும் படிங்க: ஐபிஎல் ஏலம்: ட்விட்டரில் சிஎஸ்கே செய்த மீம்ஸ் குறும்பு!