ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னையில் நடைபெற்ற முதல்கட்ட அரையிறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவாவை வீழ்த்தியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதிப்போட்டி (மதிப்பீட்டு) இன்று நடைபெற்றது. ஏற்கெனவே கோவா அணி, சென்னை அணியை விட மூன்று கோல்கள் பின் தங்கிய நிலையில் இருந்ததால், இந்தப்போட்டியில் அதனை சரிசெய்து இறுதிப்போட்டிக்குள் நுழையும் முனைப்பில் களமிறங்கியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா அணியின் லூசியன் கொயன் ஆட்டத்தின் 10’ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கைத் தொடக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து ஆட்டத்தின் 21’ஆவது நிமிடத்தில் அந்த அணியின் மொர்டடா ஃபால் கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார்.
இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோவா அணி 2-0 என்ற கோல்கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 52’ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் லாலியன்ஸுவாலா சாங்தே (Lallianzuala Chhangte) கோலடித்து சென்னை அணியின் வெற்றிக்கு உத்வேகமளித்தார். அவரைத் தொடர்ந்து ஆட்டத்தின் 59’ஆவது நிமிடத்தில் வால்ஸ்கிஸ் கோலடிக்க, சென்னை அணியின் வெற்றி உறுதியானது.
இருப்பினும் தொடர்ந்து போராடிய கோவா அணியின் ஃபால் ஆட்டத்தின் 83’ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து ஆட்டத்தின் 80’ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பெடியா கோலடிக்க ஆட்டத்தில் அனல் பறந்தது. இதனையடுத்து சாதுரியமாக செயல்பட்ட சென்னை அணி, அடுத்த 15 நிமிடத்திற்கு எதிரணியின் கோலை தடுத்து நிறுத்தும் முனைப்பில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கண்டது.
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் கோவா அணி 4-2 என்ற கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியிருந்தாலும், அண்மையில் நடந்த முதல் போட்டியில் சென்னை அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதினால், மொத்தம் 6-5 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி, ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இதையும் படிங்க:மழையால் பாதியோடு முடிந்த ஷாகித் அப்ரிடியின் அதிரடி ஆட்டம்!