இந்த ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துத் தொடரின் இறுதிப்போட்டி வரும் 14ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் சென்னையின் எஃப்.சி அணியை எதிர்த்து கொல்கத்தாவின் ஏடிகே அணி மோதுகிறது.
சென்னையின் எஃப்.சி. அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளதால் இந்த ஆட்டம் தமிழ்நாடு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சென்னையின் எஃப்.சி. அணியின் முன்னணி வீரர் ஆண்ட்ரே ஸ்கெம்ப்ரி இறுதிப்போட்டியோடு கால்பந்திலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
33 வயதாகும் ஆண்ட்ரே, மால்டா தேசிய கால்பந்து அணிக்காக 94 போட்டிகளில் ஆடியுள்ளார். இந்த ஆண்டின் ஐஎஸ்எல் தொடரில் இதுவரை ஐந்து கோல்கள் அடித்ததுடன், மூன்று கோல்கள் அடிப்பதற்கு அசிஸ்ட் செய்துள்ளார்.
ஓய்வு குறித்து ஆண்ட்ரே ஸ்கெம்ப்ரி பேசுகையில், '' 13 ஆண்டுகளாக கால்பந்து விளையாட்டில் பயணித்துவிட்டேன். எனவே, ஓய்வை அறிவிக்க இதுதான் சரியாக நேரம் எனத் தோன்றுகிறது. வாழ்வின் மற்ற விஷயங்களுக்காக நேரம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.
ஐரோப்பா, ஆசியா என எனது கால்பந்து பயணம் சிறப்பாக அமைந்துள்ளது என்றார். ஜெர்மனிம் ஆஸ்ட்ரியா, ஹங்கேரி, கிரீஸ், சிப்ரஸ், போர்ச்சுகல் என பல்வேறு நாட்டு கிளப் அணிகளுக்காக ஸ்கெம்ப்ரி கால்பந்து ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி வீரர் ஸ்கெம்ப்ரி ஓய்வை அறிவித்துள்ளதால் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று கோப்பையுடன் சென்னையின் எஃப்.சி அணி அவரை வழியனுப்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல் கால்பந்து: மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி!