நடப்பு சீசனுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடத்திலிருந்த முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கத்தில் சென்னை அணியினர் டிஃபெண்டிங்கில் மோசமாக செயல்பட்டனர்.
அதன்பின் ஆட்டத்தில் எழுச்சிபெற்ற சென்னை அணி 40ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஸ்ட்ரைக்கர் நெரிஜஸ் வால்கிஸின் (Nerijus Valskis) பாஸை சக வீரர் ரஃபேல் க்ரீவேலாரோ கோலாக மாற்றினார். இதையடுத்து, 43ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் நெரிஜஸ் வால்கிஸ் மிரட்டலான கோல் அடித்து அணியின் கோல் ஸ்கோரை இரண்டாக்கினார்.
அதன்பின் நடைபெற்ற இரண்டாம் பாதியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 65ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். சென்னை அணியின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ஹைதராபாத் அணி 88ஆவது நிமிடத்தில்தான் தங்களது முதல் கோலை அடித்தது. ஹைதராபாத் அணியின் முன்கள வீரர் மார்சின்ஹோ கோல் அடித்து ஆறுதல்படுத்தினார்.