இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - பெங்களூரு எஃப்.சி ஆகிய அணிகள் மோதின.
முன்னதாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவருவதால் பாதுகாப்பு காரணங்கள் கருதி கவுகாத்தியில் ரசிகர்களின்றி காலி மைதானத்தில் இப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதியில் இப்போட்டியில் குறைந்த அளவிலான ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கத்தில் நார்த் ஈஸ்ட் எஃப்.சி. அணி வீரர்களின் கோல் முயற்சிகள் தடுக்கப்பட்டன. பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் முதல் பாதி சமநிலையில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் பெங்களூரு எஃப்.சி கேப்டன் சுனில் சேத்ரி ஃபெனால்டி முறையில் கோல் அடித்து முன்னிலைப் பெற்றுத்தந்தார். அவரைத் தொடர்ந்து 80ஆவது நிமிடத்தில் ஆல்பர்ட் செர்ரன் ஒரு கோல் அடிக்க பெங்களூரு அணி 2-0 என வலுவான முன்னிலைப் பெற்றது.
இறுதியில் பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் நடப்பு சாம்பியனான பெங்களூரு எஃப்.சி அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. அதே வேளையில் கடைசி நான்கு போட்டிகளில் வெற்றிபெறாமல் உள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 10 புள்ளிகளுடன் ஆறவாது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: முதலில் ஸ்மித், மார்க் பவுச்சர். இப்போ காலிஸ்...! தென் ஆப்பிரிக்க அணியில் ஒன்றுசேர்ந்த மும்மூர்த்திகள்!