ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று (நவ. 26) நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் மோதியது.
பரபரப்புடன் தொடங்கிய இந்த ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்திலேயே கேரளா அணியின் செர்ஜியோ சிடோஞ்சா (Sergio Cidoncha) கோலடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து கேரளா அணியின் ஹூப்பர் (Gary Hooper) ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலடித்து, அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட அபே (Kwesi Appiah), நார்த் ஈஸ்ட் அணியின் முதல் கோலை பதிவு செய்து அசத்தினார்.
இதனால் ஆட்டத்தில் யார் வெற்றிபெறுவார் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. பின்னர் வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாகப் போராடினர். இருப்பினும் ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் இத்ரிசா சில்லா (Idrissa Sylla) கோலடித்து, அணியைத் தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார்.