2020-21 ஆண்டு சீசனுக்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. கேரளா ப்ளாஸ்டர்ஸ் - ஏடிகே மோகன் பாகன் அணிக்கு இடையிலான போட்டி ஏடிகே மோகன் பாகன் அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இன்று நடக்கவுள்ள போட்டியில் நார்த்-ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை எதிர்த்து மும்பை சிட்டின் எஃப்சி அணி ஆடுகிறது.
இந்தப் போட்டி குறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ கூறுகையில், ''நிச்சயம் இந்தப் போட்டி கடும் சவாலாக இருக்கும். இந்த சீசன் நிச்சயம் பெரும் போட்டியாக இருக்கும். ஏனென்றால் அனைத்து அணிகளும் கட்டமைப்பை சிறப்பாக உருவாக்கியுள்ளனர். எங்கள் அணியினர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்த சீசனின் முடிவில், நிச்சயம் எங்கள் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
நாங்கள் அட்டாக்கிங் ஃபார்மெட்டில்தான் ஆடுவோம். மிகக்குறைந்த கால இடைவெளியில் ஒரு தொடருக்கு தயாராவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் வித்தியாசமான சூழலுக்கு தயாராவது சவால் நிறைந்ததுதான்'' என்றார்.
மறுபுறம் நார்த்-ஈஸ்ட் யுனைடெட் அணி கடந்த சீசனுக்கு பிறகு 19 வீரர்களுடன் புதிதாக ஒப்பந்தம் மேற்கொண்டது. அதனால் அந்த அணியில் நல்ல வெளிநாட்டு வீரர்களின் கலவையோடு, இந்திய இளைஞர்களும் உள்ளனர். இதனால் இந்த சீசனில் நார்த்-ஈஸ்ட் யுனைடெட் அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதைப்பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் ஜெரார்டு நஸ் பேசுகையில், ''நான் போட்டி மனப்பான்மையோடு வலிமையான அணியாக இருக்கிறோம். கடைசி வரை முயற்சி செய்யும் மனநிலையை குழுவாக அடைய வேண்டும். மும்பை அணியின் பலம் என்ன என்பது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளோம். இப்போது இந்தப் போட்டியை மட்டுமே மனதில் வைத்து விளையாடுகிறோம்'' என்றார்.
நார்த்-ஈஸ்ட் யுனைடெட் அணி கடைசியாக ஆடிய 14 போட்டிகளில் 8இல் தோல்வியும், 6இல் டிராவும் செய்துள்ளது. இதனால் 14 போட்டிகளில் வெற்றிபெறாமல் ஆடும் நிலையை, நார்த்-ஈஸ்ட் யுனைடெட் அணி சரிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜின் தந்தை காலமானார்!