இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துத் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபார திறனை வெளிப்படுத்தினர். இதில் ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் கேரளாவின் கோஸ்டா நமோயினெசு கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் நட்சத்திர வீரர் வால்ஸ்கீஸ் 36ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்திய ஜோர்டன் முர்ரே ஆட்டத்தின் 79, 82 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.