கோவாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று (ஜன. 25) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணி - பட்டியலின் ஐந்தாம் இடத்தில் இருக்கும் சென்னையின் எஃப்சியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியின் ஆரம்பத்திலேயே அட்டாக்கிங் ஆட்டத்தைக் கையிலெடுத்து மும்பை சிட்டி எஃப்சி அணிக்கு, ஒபேச்சே ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் கோலடித்து முன்னிலைப்படுத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சென்னையின் எஃப்சிக்கு 76ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பயன்படுத்தி எஸ்மெயில் கோன்கால்வ்ஸ் (Esmael goncalves) கோலடித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.
இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மும்பை சிட்டி எஃப்சி அணி 30 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திலும், சென்னையின் எஃப்சி அணி 16 புள்ளிகளுடன் பட்டியலின் ஐந்தாம் இடத்திலும் நீடித்துவருகின்றன.
இதையும் படிங்க: 2ஆவது டெஸ்டிலும் வெற்றி.. ஒயிட்வாஷ் ஆன இலங்கை.. விராட் சாதனையை சமன் செய்த ரூட்!