இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியில் ஆரம்பத்திலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் எஃப்சி அணியின் அரிதனே சாந்தனா 3ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
அவரைத் தொடர்ந்து அந்த அணியின் ஜோயல் ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் கோலடிக்க, ஹைதராபாத் அணி வலிமையான நிலையில் இருந்தது.
அதன்பின் ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தின் போது நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பயன்படுத்திய ஃபெட்ரிகோ கோலடித்து அணி மீண்டு எழுவதற்கான வாய்ப்பை உருவாக்கினார்.
பின்னர் முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரமான 45+2ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் பெஞ்சமின் கோலடிக்க, முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
இதன்பின் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போரடியதால், வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதில் ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியின் லிஸ்டன் கோலாகோ கோலடிக்க, அந்த அணியின் வெற்றி உறுதியானது.
இருப்பினும் அதனை உறுதிசெய்யும் வகையில் ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+4ஆவது நிமிடத்திலும் கோலாகோ கோலடித்து அசத்தினார். இதன் மூலம் ஹைதராபாத் எஃப்சி அணி 4-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் எஃப்சி அணி 15 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்திற்கும் முன்னேறியது.
இதையும் படிங்க:ஜாம்பவான்கள் வரிசையில் ஸ்மித்!