விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சமின்றி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கலைகட்டி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சீசனில் தோல்வியையே சந்தித்திராத ஏடிகே மோகன் பாகன் அணி - இந்த சீசனில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியுடன் மோதியது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியின் தொடக்கம் முதலே ஜாம்ஷெட்பூர் அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. அதன் பயணாக ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் நட்சத்திர வீரர் வால்ஸ்கீஸ் அசத்தலான ஒரு கோலை அடித்து அணியின் கோல் கணக்கைத் தொடக்கி வைத்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் வால்ஸ்கீஸ் மீண்டுமொரு கோலடித்து, அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.