கரோனா பாதுகாப்புச் சூழலுடன் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னையின் எஃப்சி அணி, அறிமுக அணியான ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கோவாவின் திலக் மைதான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்கவுள்ளது.
சென்னையின் எஃப்சி
நடப்பு ஐஎஸ்எல் சீசனில் சென்னையில் எஃப்சி அணி தொடக்க போட்டிகளில் சறுக்கினாலும், தற்போது மீண்டும் தனது வெற்றிப் பயணத்திற்குத் திரும்பியுள்ளது.
இந்த சீசனில் இதுவரை 6 லீக் ஆட்டங்களில் பங்கேற்றுள்ள சென்னையின் எஃப்சி அணி இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி, இரண்டு போட்டிகளை டிராவில் முடித்துள்ளது. இதன்மூலம் எட்டு புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
இனி வரும் போட்டிகளிலும் சென்னையின் எஃப்சி அணி வெற்றிபெற்று, மீண்டும் ஐஎஸ்எல் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.