இந்தியாவின் உள்ளூர் கால்பந்து திருவிழாவான இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஏழாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது. இதில் நேற்று (பிப். 2) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் ஆரம்பத்திலேயே பெங்களூரு அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் அந்த அணியின் கிளீட்டன் சில்வா ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்திலும், டெப்ஜித் மஜும்தர் (Debjit Majumder) ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்திலும் கோலடித்து முதல் பாதி ஆட்டத்திலேயே வெற்றியை உறுதிசெய்தனர்.
இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெங்களூரு எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் தனது தடுப்பாட்ட (டிஃபென்ஸ்) பிரிவை வலிமைப்படுத்திய பெங்களூரு அணி, ஈஸ்ட் பெங்கால் அணியின் கோலடிக்கும் முயற்சிகளைத் தவிடுபொடியாக்கினர்.
இதனால் ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு எஃப்சி அணி 18 புள்ளிகளைப் பெற்று ஆறாம் இடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க: என் பயோபிக் உருவாகிறதா?- யார்க்கர் நடராஜனின் பதில்!