இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான நேற்றைய லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி அணி, ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொண்டது. இந்த சீசன் தொடக்கத்தில் சற்று மோசமான ஃபார்மில் சென்னை அணி இருந்தாலும், கடைசியாக மோதிய ஹைதராபாத், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற்று அந்த அணி மிரட்டியது.
இதனால், சொந்த மண்ணில் நடைபெறும் இப்போட்டியிலும் வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்தது. இதையடுத்து, ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்திலேயே சென்னை அணியின் ஸ்ட்ரைக்கர் நெர்ஜஸ் வாஸ்கிஸ் கோல் அடித்து அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தார்.
அதன்பின் 43ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் முன்கள வீரரான ஆண்ட்ரே செம்ப்ரி (Andre Schembri) ஹெட்டர் முறையில் கோல் அடித்து அணியின் கோல் ஸ்கோரை இரண்டாக்க முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் எழுச்சியுடன் விளையாடிய ஜாம்ஷெட்பூர் அணி 71ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. ஜாம்ஷெட்பூர் வீரர் செர்ஜியோ காஸ்டெல் இந்த கோலை அடித்தவுடன் ஜாம்ஷெட்பூர் அணி இப்போட்டியில் கம்பேக் தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.