தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல் 20-21: தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்! - சென்னையின் எஃப்சி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் நாளை (நவ.20) முதல் கோவாவில் நடைபெறவுள்ளது. நடப்பு சீசன் ஐஎஸ்எல் தொடரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இங்கு காண்போம்.

isl-2020-21-teams-venues-star-players-prize-money-and-all-you-need-to-know
isl-2020-21-teams-venues-star-players-prize-money-and-all-you-need-to-know

By

Published : Nov 19, 2020, 4:27 PM IST

இந்தியாவின் பிரபல உள்ளூர் கால்பந்து தொடரான ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் நாளை முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதிலும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த சீசனின் அனைத்து போட்டிகளும் கோவா மாநிலத்தில் உள்ள மூன்று மைதானங்களில் மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நடப்பு சீசனில் அனைத்து போட்டிகளையும் பார்வையாளர்களின்றி நடத்தவும் ஐஎஸ்எல் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

அதேசமயம் கடந்த ஆண்டு பத்து அணிகள் மட்டும் பங்கேற்ற இத்தொடரில் தற்போது கொல்கத்தாவை மையமாக கொண்ட ஈஸ்ட் பெங்கால் அணியும் இணைந்துள்ளது. அதேபோல் நடப்பு சாம்பியன் ஏடிகே அணி இம்முறை மோகன் பாகன் அணியுடன் கைக்கோத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்எல் 20-21 அணிகளும், சிறப்பம்சங்களும்!

ஏடிகே மோகன் பாகன்:

ஐஎஸ்எல் தொடரில் அதிக முறை கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமையைப் பெற்றுள்ள ஏடிகே அணி, நடப்பு சீசனில் கொல்கத்தாவின் பலம் வாய்ந்த உள்ளூர் அணியான மோகன் பாகனுடன் இணைந்து செயல்படவுள்ளது. மேலும் இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினின் அன்டோனியோ லோபஸ் ஹபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சீசனில் ஏடிகே அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் எஃப்சி:

கடந்த ஐஎஸ்எல் சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய சென்னையின் எஃப்சி அணி, நூலிழையில் ஏடிகே அணியிடம் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது. இதுவரை இரண்டு முறை ஐஎஸ்எல் கோப்பையைக் கைப்பற்றியுள்ள சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கவுள்ளது.

பெங்களூரு எஃப்சி:

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தலைமையில் களமிறங்கும் பெங்களூரு எஃப்சி அணி தனது முதல் ஐஎஸ்எல் கொப்பைக்காக கத்திருக்கிறது. ஓவ்வொரு சீசனின் லீக் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் பெங்களூரு அணி, பிளே ஆஃப் சுற்றுகளில் சொதப்பியதால் கோப்பையை வெல்லூம் வாய்ப்பை நழுவவிட்டுள்ளது. இதனால் இந்த சீசனில் அதனை சரிசெய்து பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

எஃப்சி கோவா:

கடந்த ஐஎஸ்எல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட எஃப்சி கோவா அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியிருந்தது. இதன் மூலம் ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் தொடருக்கும் தகுதி பெற்று, இந்தியா தரப்பில் அத்தொடரில் பங்கேற்கும் முதல் அணி என்ற வரலாற்றையும் பதிவு செய்தது. இந்த சீசனின் அனைத்து போட்டிகளில் கோவாவில் நடைபெறவுள்ளதால் எஃப்சி கோவா அணி இந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஹைதராபாத் எஃப்சி:

கடந்த ஐஎஸ்எல் சீசனில் அறிமுகமான ஹைதராபாத் எஃப்சி அணி, தொடர் தோல்விகளால் தனது அறிமுக சீசனிலேயே புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. அதனால் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஜாம்ஷெட்பூர் எஃப்சி:

2019-20 ஆம் ஆண்டிற்கான சீசனில் ஜாம்ஷெட்பூர் அணி மோசமான தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் நடப்பு சீசனில் அணி பெரும் மாற்றங்களை அணி நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சீசனில் அதிக கோல்களை அடுத்த சென்னை அணியின் வால்ஸ்கீஸை ஜாம்ஷெட்பூர் அணி தன்வசம் இழுத்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

கேரளா பிளாஸ்டர்ஸ்:

ஐஎஸ்எல் தொடரில் இதுவரை இரு முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதற்கென அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக கிபு விக்குனாவையும் நியமித்துள்ளது. இவர் கடந்த சீசன் ஐ- லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பாகன் அணியின் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை சிட்டி எஃப்சி:

ஒவ்வோரு ஆண்டும் நட்சத்திர வீரர்களைக் கொண்டு களமிறங்கும் மும்பை சிட்டி எஃப்சி அணி இதுவரை ஒருமுறை கூட ஐஎஸ்எல் கோப்பை வென்றதில்லை. இதனால் நடப்பு ஐஎஸ்எல் சீசனின் வீரர்கள் ஏலத்தின் போது நட்சத்திர வீரர்களை தன்பக்கம் இழுத்துள்ளது. மேலும் அணியின் பயிற்சியாளராக செர்ஜியோ லோபராவையும் நியமித்துள்ளது.

ஒடிசா எஃப்சி:

2019-20 ஆம் ஆண்டுக்கான ஐஎஸ்எல் சீசனில் அறிமுகமான ஒடிசா எஃப்சி அணி, சிறப்பாக செயல்பட்டு புள்ளிப்பட்டியலில் மதிக்கத்தக்க இடத்த தக்கவைத்தது. இருப்பினும் நடப்பு சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பாக அணியில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. ஒடிசா அணியின் இந்த மாற்றங்கள் பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி:

ஐஎஸ்எல் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி, இதுவரை ஒருமுறைகூட இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இல்லை. மேலும் 2018-29ஆம் ஆண்டு ஐஎஸ்எல் சீசனின்போது பிளே ஆஃப் சுற்றுவரை முன்னேறியும், இறுதிப்போட்டிகான வாய்ப்பை இழந்தது. இருப்பினும் நடப்பு சீசனில் கோப்பையை வெல்லும் கனவோடு நார்த் ஈஸ்ட் அணி களம் காணும் என்பதில் சந்தேகமில்லை.

எஸ்.சி. ஈஸ்ட் பெங்கால்:

இந்தியாவின் பிரபலமான கால்பந்து கிளப்களின் ஒன்றான ஈஸ்ட் பெங்கால் அணி, இம்முறை ஐஎஸ்எல் சீசனில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த தயாராகிவருகிறது. தனது அறிமுக சீசனில் பங்கேற்கும் ஈஸ்ட் பெங்கால் அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் லிவர்பூல் அணியின் ஜாம்பவான் ராபி ஃபோலரை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதால், இந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மைதானங்கள்:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு ஐஎஸ்எல் சீசனின் அனைத்து போட்டிகளும் கோவாவில் நடைபெறும் என ஐஎஸ்எல் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன் படி,

  • ஜவஹர்லால் நேரு மைதானம் , ஃபடோர்டா
  • ஜி.எம்.சி தடகள மைதானம், பாம்போலிம்
  • திலக் மைதன் மைதானம், வாஸ்கோ ஆகிய மூன்று மைதானங்களில் நடப்பு சீசன் ஐஎஸ்எல் போட்டிகள் நடைபெறவுள்ளது.

போட்டி முறை:

இந்த ஆண்டு ஐஎஸ்எல் சீசனில் மொத்தம் 115 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஓவ்வொரு அணியும் தலா இருமுறை (ஹோம் மற்றும் அவே) நேருக்கு நேர் மோதவுள்ளன. இப்போட்டிகள் அனைத்தும் ரவுண்ட் ராபீன் முறையில் நடைபெறவுள்ளன. தொடரின் இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவர். மேலும் லீக் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் அணி ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசுத்தொகை விவரம்:

  • சாம்பியன் பட்டம் வெல்லும் அணி - ரூ. 8 கோடி
  • இரண்டாம் இடம் பிடிக்கும் அணி - ரூ. 4 கோடி
  • அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கு - ரூ. 1.5 கோடி
  • அதிக கோல் அடிக்கும் வீரருக்கு - தங்க காலணி மற்றும் ரூ. 3 லட்சம்
  • சிறந்த கோல் கீப்பர் - தங்க கிளெவ் மற்றும் ரூ. 3 லட்சம்
  • லீக்கின் வளர்ந்து வரும் வீரருக்கு - ரூ. 2.5 லட்சம்
  • லீக்கின் சிறந்த வீரருக்கு - ரூ. 5 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

இத்தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - ஏடிகே மோகன் பாகன் அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details