கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தியாவின் உள்ளூர் கால்பந்து திருவிழாவான இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரின் ஏழாவது சீசன் நேற்று முதல் கோலாகலமாகத் தொடங்கியது.
சீசனின் முதல் போட்டியில் மோதிய ஏடிகே மோகன் பாகன் - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.
இத்தொடரில் இன்று (நவ.21) நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி, மும்பை சிட்டி எஃப்சி அணியுடன் மோதுகிறது. கோவா மாநிலம் வாஸ்கோவில் அமைந்துள்ள திலக் மைதான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
நார்த் ஈஸ்ட் யுனைடெட்:
கடந்த ஐஎஸ்எல் சீசனில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சந்தித்த தொடர் தோல்விகள் காரணமாக, புள்ளிப்பட்டியலின் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதனால் இந்தாண்டு கோப்பையை வெல்லும் முனைப்பில், வீரர்கள் ஏலத்தின்போது 19 வீரர்களை தங்கள் வசம் இழுத்துள்ளது. அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள், திறமையான உள்நாட்டு வீரர்கள் என தேர்வு செய்துள்ள நார்த் ஈஸ்ட் அணி, தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினி ஜெரார்ட் நுஸையும் நியமித்துள்ளது.