இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்துத் தொடரின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், கொச்சியில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்.சி. அணி, ஒடிசா எஃப்.சி. அணியுடன் மோதியது.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல்பாதியின்போது இரு அணிகளிலிருந்தும் மூன்று வீரர்கள் காயம் காரணமாக மாற்றப்பட்டனர். குறிப்பாக, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் கேப்டன் ஜெய்ரோ ரோட்ரிகஸ், ரஃபேல் மெஸ்ஸி பவ்லி, ஒடிசா வீரர் அரிடேன் சன்டானா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இருப்பினும், இரு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான வாய்ப்பு ஏரளமாகக் கிடைத்தாலும் அவர்களால் அதை கோலாக மாற்ற முடியாமல் போனது. இதனால், இப்போட்டி கோலின்றி சமனில் முடிந்தது. சொந்த மண்ணில் விளையாடிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஒடிசா எஃப்.சி. அணிக்கு அழுத்ததைத் தந்து விளையாடியது. இருப்பினும், ஒடிசா அணி தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது.
இதனிடையே, இப்போட்டியில் நடுவரின் அலட்சியத்தால் கேரளா அணிக்கு இரண்டு பெனால்டி கிடைக்கவில்லை. 35ஆவது நிமிடத்தில் கேரள வீரர் சஹால் அப்துல் சமாத் ஒடிசா அணியின் நான்கு வீரர்களைக் கடந்து கோல் அடிக்க முயற்சித்தார். அப்போது, பாக்ஸிலிருந்த ஒடிசா அணியின் தடுப்பாட்டாக்காரர் நாரயண் தாஸ் அவரை கீழே தள்ளிவிட்டார்.