ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்றைய லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் பெங்களூரு எஃப்சி அணி, ஒடிசா அணியுடன் மோதியது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளின் கோல்கீப்பர்களுக்கு கோல் தடுப்பதற்கான வேலை அதிகமாகவே இருந்தது. அந்த அளவிற்கு இரு அணிகளும் அட்டாக்கிங் முறையில் விளையாடி கோல் அடிப்பதற்கான முயற்சியில் முழு வீச்சில் களமிறங்கியது.
ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு கோல் நோக்கி தான் அடித்த முதல் ஷாட்டை, ஒடிசா அணியின் டிஃபெண்டர் டியாவான்டோ தியாக்னே தடுத்தார். இதையடுத்து, 37ஆவது நிமிடத்தில், பெங்களூரு அணியின் சென்டர் பேக் (டிஃபெண்டர்) ஜூவானன் அடித்த ஷாட்டை, ஒடிசா அணியின் கோல்கீப்பர் அர்ஷ்தீப் சிங் தடுக்க முயன்றார். ஆனால், பந்து கோல் லைன்னை கடந்ததால், அது கோலாக மாறியது.