ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி, ஒடிசா அணியுடன் மோதியது. முன்னதாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கம்பேக் தந்து வெற்றிபெற்ற சென்னை அணியிடம் இன்றைய ஆட்டத்தில், ஒடிசா அணி கம்பேக் கொடுத்துள்ளது. சென்னை வீரர் வால்ஸ்கிஸ் 51ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடிக்க , அதையடுத்து ஒடிசா வீரர் ஹெர்னான்டஸ் 54ஆவது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.
வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட சென்னையின் எஃப்சி! - ஐஎஸ்எல் 2019
ஐஎஸ்எல் தொடரில் சென்னையின் எஃப்சி - ஒடிசா அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
பின் மீண்டும் வால்ஸ்கிஸ் 71ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனால், நிச்சயம் சென்னை அணி வெற்றிபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 84ஆவது நிமிடத்தில் ஒடிசா அணிக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திகொண்ட சன்டானா கோலாக மாற்ற, இப்போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
இப்போட்டியில் சென்னை அணி முன்னிலை பெற்றிருந்தும் அவர்களால் வெற்றிபெற முடியாமல் போனது. இதன் மூலம், சென்னையின் எஃப்சி அணி விளையாடிய ஆறு போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு டிரா, மூன்று தோல்வி என ஐந்து புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், ஒடிசா அணி ஆறு ஆட்டங்களில் ஒரு வெற்றி, மூன்று டிரா, இரண்டு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை அணி தனது அடுத்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.