இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. அதன்படி ஜாம்ஷெட்பூர் ஜேஆர்டி டாடா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் உள்ளூர் அணியான ஜாம்ஷெட்பூர் எஃப்.சி. அணியும், நடப்பு சாம்பியனுமான பெங்களூரு எஃப்.சி. ஆகிய அணிகள் மோதின. நடப்பு சீசனில் வெற்றியைப் பதிவு செய்யாத பெங்களூரு அணி முதல் வெற்றியை பதிவு செய்யவும், தொடர் வெற்றிகளைக் குவித்த ஜாம்ஷெட்பூர் அணி அடுத்த வெற்றியை நோக்கியும் களமிறங்கின.
இப்போட்டியின் தொடக்கத்திலிருந்தே இரு அணி வீரர்களும் கோலடிக்கும் முயற்சியில் களமிறங்கினர். ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் அடிக்கப்பட்ட கோலை பெங்களூரு கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து சிறப்பாக தடுத்தார். இதே போன்று பெங்களூரு அணிக்கு 12ஆவது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை ஜாம்ஷெட்பூர் கோல் கீப்பர் சுபத்ரா பால் தடுத்தார். இது போன்று இரண்டு பக்கத்திலுமிருந்த கோல் கீப்பர்கள் ஸ்ட்ரைக்கர்களின் அனைத்து முயற்சிகளையும் தோல்வியடைய வைத்தனர்.