நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022இல் கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் விளையாடுவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் கண்டங்கள் ரீதியாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆசிய கண்டங்களுக்கான தகுதிச்சுற்றின் குரூப் இ பிரிவில் இந்தியா, ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கத்தார் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
இந்த அணிகளுக்கு ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், இந்திய அணி ஓமன் அணியுடனான முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியையும், கத்தார் மற்றும் வங்கதேச அணியுடனான போட்டியில் சமனுடனும் முடிவடைந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன், இந்திய அணி பலப்பரீட்சை நடத்தியது.
தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கோல் அடிப்பதற்கான முயற்சியில் ஆப்கான் அணி வீரர்கள் ஈடுபட்டனர். எனினும் ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் ஜெல்ஃபகர் நாசரியின் கோலடித்து அசத்த முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
அதன் பின் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் அட்டாக்கிங் முறையில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இறுதி நிமிடம் வரை பரபரப்புக்கு இட்டுச் சென்ற இப்போட்டியில் ஆட்டத்தில் கூடுதல் நேரமான 90+3ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் சீமின்லன் துங்கல் கோலடித்து அசத்தினார்.