நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022இல் கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் விளையாடுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் கண்டங்கள் ரீதியாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆசிய கண்டங்களுக்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி, ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கத்தார் ஆகிய அணிகள் குரூப் இ பிரிவில் இடம்பிடித்துள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்தியா - ஓமன் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில், முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கோல் அடிப்பதற்காக அட்டாக்கிங் முறையில் விளையாடினர். 15 நிமிடத்தில் இந்திய வீரர் உதான்டா சிங் அடித்த கிக் கம்பத்தில் பட்டு விலகியது.