'சூப்பர் கேப்டன்' என்று கால்பந்து ரசிகர்களால் அழைக்கப்படும் சுனில் சேத்ரி, இந்திய அணிக்காக 2005ஆம் ஆண்டு அறிமுகமானார். அன்றிலிருந்து இன்றுவரை சர்வதேச அளவில் இந்திய அணிக்காக 118 போட்டிகள், 74 கோல்கள் அடித்துள்ளார்.
அந்தவகையில் சேத்ரி உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரின் 34ஆவது பிறந்தநாளன்று, ஆசிய கால்பந்து சம்மேளனம் சார்பாக 'ஆசியன் ஐகான்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
தனது இளம் வயதிலேயே கால்பந்துப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய இவர், 2002ஆம் ஆண்டில் மோகன் பகான் அணிக்காகவும், ஜேசிடி அணிக்காகவும் 21 போட்டிகளில் பங்கேற்று 48 கோல்களை அடித்தார். அதையடுத்து மேஜர் லீக் சாக்கர் தொடரில் கன்சாஸ் சிட்டி அணிக்காகவும் ஆடினார்.
பின்னர் ஐ லீக் கால்பந்துத் தொடரில் சிராக் மற்றும் மோகன் பகான் அணிகளுக்காக ஆடத்தொடங்கினார். இவரது வருகைக்கு பிறகு இந்திய கால்பந்து அணி 2007, 2009, 2012 ஆகிய ஆண்டுகளில் நேரு கோப்பையையும், 2011ஆம் ஆண்டு எஸ்ஏஎஃப்எஃப் கோப்பையையும் கைப்பற்றியது.