தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#INDvsBAN: கடைசி நிமிடத்தில் சமன் செய்த இந்தியா! - உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டி

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

#INDvsBAN

By

Published : Oct 16, 2019, 2:53 PM IST

#INDvsBAN: கத்தாரில் அடுத்த ஆண்டு ஃபிபா உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான, தகுதிச் சுற்றுப் போட்டிகள் கண்டங்கள் வாரியாக நடைபெற்றுவருகின்றன. இதில், ஆசிய கண்டத்துக்கான குரூப் இ பிரிவில் இந்தியா, ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கத்தார் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

இதில், இந்தியா அணி ஓமன் அணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. பின், கத்தார் அணிக்கு எதிரான போட்டி கோல்கீப்பரின் உதவியால் இந்திய அணி சமன் செய்தது. இந்நிலையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்றுப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.

சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால், ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் தெரிவித்திருந்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவு தர 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் கூடினர்.

இதைத்தொடர்ந்து, 42ஆவது நிமிடத்தில் வங்கதேச வீரர் சாத் உதின் கோல் அடிக்க முதல் பாதி ஆட்டத்தில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதன் பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதியிலும் இந்திய அணி கோலடிக்கத் திணறியது.

இதனால், இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துவிடுமோ என்ற ஏமாற்றம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் இருந்த நிலையில், இந்திய வீரர் அடில் கான் ஹெட்டர் முறையில் கோல் அடித்து அசத்தியதால் போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இதனால், இந்திய அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு சமன், ஒரு தோல்வி என இரண்டு புள்ளிகளை எடுத்துள்ளது.

இதையும் படிங்க: #SAFFU15WomensChampionship: முதல் போட்டியிலேயே கெத்து காட்டிய இந்திய கால்பந்து அணி!

ABOUT THE AUTHOR

...view details