2019-20ஆம் ஆண்டுக்கான ஐ லீக் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள டி.ஆர்.சி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில் ரியல் காஷ்மீர் எஃப்சி அணி நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சி அணியுடன் மோதியது. நடப்பு சீசனில் ரியல் காஷ்மீர் அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டி என்பதால் உள்ளூர் ரசிகர்கள் அவர்களுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஆட்டம் தொடங்கியதிலிருந்தே ரியல் காஷ்மீர் வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியில் களமிறங்கினர். ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலும், ஏழாவது நிமிடத்திலும் கோல் அடிக்க ரியல் காஷ்மீர் அணிக்குக் கிடைத்த வாய்ப்பு, சென்னை சிட்டி கோல்கீப்பர் நவ்செத் சன்டானாவால் தடுக்கப்பட்டது.
இருப்பினும், மனம் தளராமல் ரியல் காஷ்மீர் வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். குறிப்பாக, 21 ஆவது நிமிடத்தில் டேனிஷ் ஃபரூக் பட் ஹெட்டர் முறையில் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதைத்தொடர்ந்து அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே (27ஆவது நிமிடம்) ரியல் காஷ்மீர் வீரர் பாஸி அர்மந்த் ஹெட்டர் முறையில் கோல் அடித்து மிரட்டியதால் காஷ்மீர் ரசிகர்களின் கொண்டாட்டம் இரட்டிப்பானது.