இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து கால்பந்து, வாலிபால், கபடி ஆகிய போட்டிகளும் லீக் முறையில் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் ஐஎஸ்எல் கால்பந்து தொடரைப் போல நடத்தப்பட்டு வரும், ஐ லீக் கால்பந்து போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் காஷ்மீர் எஃப்சி அணியானது, வருகிற டிசம்பர் 12 மற்றும் 15 ஆம் தேதி உள்ளூர் மைதானமான ஸ்ரீநகர் மைதானத்தில் விளையாடுவதாக இருந்தது.
ஆனால், இந்தாண்டு வழக்கத்தை விட ஸ்ரீநகரில் பனிப்பொழிவு அதிகளவில் உள்ளதால், ஸ்ரீநகர் விமான நிலையமானது நேற்று மூடப்பட்டது. மேலும் இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு, காஷ்மீரில் நிலவும் தட்பவெப்பச் சூழல் காரணமாக, அங்கு நடைபெறவிருந்த போட்டிகளை டிசம்பர் 20 அல்லது 26ஆம் தேதிகளுக்கும் மேல் மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஐ லீக்கின் உரிமையாளர் சுனாந்தோ தார் கூறுகையில், காஷ்மீரில் நிலவும் இந்தச் சூழ்நிலையானது டிசம்பர் 20ஆம் தேதிக்குள் சீரடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே போட்டிகள் 20ஆம் தேதிக்கு மேல் தொடங்கும் என இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊக்க மருந்து புகார் - ரஷ்யாவுக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்துப்போட்டிகளிலும் விளையாடத் தடை!