ஐ லீக் கால்பந்து தொடர்: சாதனைப் படைக்குமா சென்னை சிட்டி அணி? - ஐ லீக்
கோவா: இன்று நடைபெறும் போட்டியில், சர்ச்சில் பிரதர்ஸ் கோவா அணியை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுமா? சென்னை சிட்டி அணி என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ லீக் கால்பந்து தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று கோவா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சர்ச்சில் பிரதர்ஸ் அணியை எதிர்த்து சென்னை சிட்டி அணி மோதுகிறது. 19 போட்டிகளில் பங்கேற்று 12 வெற்றி, 2 தோல்வி, 4 போட்டிகளில் டிரா செய்து புள்ளிப் பட்டியலில் 40 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் சென்னை சிட்டி அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்று ஐ லீக் கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சில் பிரதர்ஸ் கோவா அணி 18 ஆட்டங்களில் எட்டு வெற்றியுடன், புள்ளிப் பட்டியலில் 31 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்த அணி சென்னை அணிக்கு கடுமையான சவாலைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அணிக்கு சொந்த மைதானம் என்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பேசுகையில், 'இந்த போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை வெல்ல விரும்புகிறேன். தொடரை சிறப்பான முறையில் முடிக்க வேண்டும். வீரர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியதற்கு பயிற்சி மட்டுமே காரணம்' என தெரிவித்தார்.