ஐ லீக் கால்பந்து தொடரின் 2019-20 சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சி அணி, பஞ்சாப்பின் மினர்வா எஃப்சி அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியது.
இதையடுத்து, நடைபெற்ற இரண்டாம் பாதியின் கடைசிக் கட்டத்தில் மினர்வா எஃப்சி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் அடிக்கும் முயற்சியில் களமிறங்கியது. குறிப்பாக மினர்வா அணியைச் சேர்ந்த சேர்ந்த அசர் பைரிக் திபான்டா 78ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு முன்னிலைப் பெற்றுத் தந்தார்.
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மினர்வா வீரர்கள் இதற்குப் பதிலடி தரும் விதமாக, சென்னை சிட்டி வீரர் பெட்ரோ மான்சி 85ஆவது நிமிடத்தில் கோல் அடித்தாலும், அதற்கடுத்த நிமிடங்களிலேயே மினர்வா அணி ஆட்டத்தில் எழுச்சிப் பெற்றது. 87ஆவது நிமிடத்தில் மினர்வா வீரர் தொய்பா சிங், 91ஆவது நிமிடத்தில் மினர்வா வீரர் செர்ஜியோ பர்போசா ஆகியோரும் கோல் அடித்து மிரட்டினர். இறுதியில், சென்னை சிட்டி எஃப்சி அணி 1-3 என்ற கோல் கணக்கில் மினர்வா அணியிடம் படுதோல்வி அடைந்தது.
இப்போட்டியின் மூலம், சென்னை சிட்டி எஃப்சி அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என மூன்று புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், மினர்வா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் தலா ஒரு வெற்றி, தோல்வி, டிரா என நான்கு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல், ஐ லீக் அணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்!