நடப்பு சீசனுக்கான ஐ லீக் கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சி அணி, ஐஸ்வால் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. மிஸோரம் தலைநகர் ஐஸ்வாலில் நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இருப்பினும் ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் ஐஸ்வால் அணியின் கேப்டன் அல்ஃபிரெட் ஜார்யான் சென்னை அணியின் டிஃபெண்டர்களைக் கடந்து த்ரூ பால் வழங்க அதை சக வீரர் வில்லியம் லால்நுன்ஃபெலா கோலாக்கினார்.
இதனால், 10ஆவது நிமிடத்திலேயே ஐஸ்வால் அணி முதல் கோல் அடித்து ஆட்டத்தில் முன்னிலை பெற தொடங்கியது. இதையடுத்து, கோல் அடிக்க சென்னை சிட்டி வீரர்கள் எடுத்த பல முயற்சிகளும் எடுபடவில்லை. இந்த நிலையில், ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தில் சென்னை சிட்டி அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட சென்னை வீரர் கட்சுமி யசா கோலாக மாற்றினார். இதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் முடிவடைிந்தது.