கொரோனா வைரசால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், இன்று முதல் மார்ச் 31வரை ஐ லீக் கால்பந்து தொடரின் அனைத்துப் போட்டிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்திருந்தது. இதனிடையே, நேற்றைய லீக் போட்டியில் நெரோக்கா - சென்னை சிட்டி எஃப்சி அணிகள் மோதின.
ஒருவேளை கொரோனாவால் ஐ லீக் சீசன் கைவிடப்பட்டால், இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவிப்பின்படி இப்போட்டிதான் நடப்பு சீசனின் கடைசிப் போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரசிகர்களின்றி நடைபெற்ற இப்போட்டியின் முதல் நிமிடத்திலேயே நெரோக்கா வீரர் கங்கம் ஹோரம் கோல் அடித்து அசத்தினார். இதற்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் சென்னை சிட்டி அணி அட்டாக்கிங் முறையில் விளையாடியது.
இதனால், 21ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் மஷூர் ஷெரிஃப் கோல் அடித்தார். பின்னர், ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் மிரண்டா கோல் அடிக்க முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் நெரோக்கா அணி கோல் அடிக்கத் தவறியதால் இப்போட்டி சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.